இளமையின் ஏக்கம்







எனக்கும் ஆசையுண்டு 
பிரபலமாக;
பல பிரபலங்களைப்போல ...
எப்படி பிரபலித்தார்கள் ?
இயற்கையின் பல 
இயல்பைச் சொல்லித்தானே!

எங்களூர் இயற்கையை 
அக்கு வேறு ஆணி வேறாக 
அலசி எழுதிட ஆசை!
எழுதத் தெரியாது.
எழுத்தறிவு..........?

எங்களூர் மலையில் 
தஞ்சம் புகும் முகிலினத்தின் 
முக்காடிட்ட முகத்தினை;
உற்சாகமாய் உயரே எழும் 
உணர்ச்சியின் உச்சத்தை 
உரக்கப் படித்திட ஆசை!
படிக்கத்தெரியாது.
படிப்பறிவு............?

பச்சை பாய் பரப்பி 
பயிர் பரப்பின் மேலாடும் 
அலையின் அழகினை;
காரணமாம் காற்றின் கீர்த்தியை 
இசைத்திட ஆசை!
இசைக்கத் தெரியாது!
இசைஞானம்..........?

இரத்தினபுரத்தின் இனிமையை;
இயற்கை இரகசியத்தை;
வனப்பு மிகு வன அழகை 
பாருலகும் பரப்பிட ஆசை !
பாமரன்..................நான்!

எ னக்கும் ஆசையுண்டு
படிப்பேன்;பட்டம் பெறுவேன்.
எழுதுவேன்;இயற்றுவேன்.
பாடுவேன் பாரதியாய்;
கவிதையில் கன்னதாசனாவேன்;
இசைப்பேன் இளைய ராஜா போல்.

அப்போது,

ரசிப்பின் இளமையும் இருக்காது.
ரசிக்க இயற்கையும் இருக்காது.

புகை மண்டலமாய் முகிலினமும் 
கருமைக் கழிவாய் பசுமையும் 
மாறியிருக்கும்!
மலை முகடாய் அடுக்கு மாடிகளும் 
எழிலழகாய் திகிலமைப்பும் 
நிரந்தரமாய் அமைந்திருக்கும்!

எனக்கும் ஆசையுண்டு
பிரபலமாக;
பல பிரபலங்களைப்போல ...
எப்படி பிரபலித்தார்கள் ?
இயற்கையின் பல 
இயல்பைச் சொல்லித்தானே!




Comments

  1. வாவ்! உனக்குள்ளும் இருக்கிறானா, இத்தனை வசந்தங்களையும் பார்த்து வியந்த பித்தன்!!

    ReplyDelete
  2. அறிவென்பது ஆரம்பத்தில் அவசியமில்லை என்பது என் அவதானம். எல்லாவற்றிற்கும் தேவை ஆர்வமும் நேரமும் மட்டுமே. அறிவென்பது காலப்போக்கில் வந்துவிடும்.

    உதாரணத்திற்கு கலையுலகின் கண்மணி கமலஹாசனைச் சொல்வேன். அவர் அதிகம் படித்ததில்லை. ஆனால் அவருக்குள் தற்போது இருக்கும் ஞானம் அளப்பெரியது. அவரின் ஆங்கிலப் பேச்சிற்கு வாய் பிளந்து நிற்கிறேன். அத்தனை அருமையாய் ஆங்கிலம் பேசுபவர் தமிழ் பேசும் எழிலே தனி. அவர் தமிழில் பேசுகையில் ஆங்கில வார்த்தைகள் கலப்பதில்லை.

    இன்று இவ்வளவு உயர்ந்திருக்கிறார் என்றால் அது கலையின் மேல் அவருக்கிருந்த ஆர்வமும், அதற்கு அவர் செலவிட்ட நேரமும், அவரது உழைப்புமே காரணம்.

    கமல் மட்டுமல்ல என்னை வியக்கவைக்கின்ற ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின், தோனி இவர்களில் எவருமே அதிகம் அறிவுடையவர்கள் அல்ல.

    அவர்களுக்கு இருந்த ஆர்வமும், நேரமும், அர்ப்பணிப்பும் தான் அவர்கள் உயரக் காரணம்.

    நாமோ செவிலியப்பணி செய்து விட்டு களைப்பாக இருக்கையில் கலையைக் குறித்து சிந்திக்க ஏது நேரம். இதில் குடும்பச்சுமை வேறு!!

    இனி வரும் சந்ததியேனும் அவர்கள் விரும்புகிற கலையை செய்ய நாம் ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. நன்றாக சொன்னீர்கள் எட்வின்.
    அறிவு என்பது அனுபவம் என்றால் மிகை இல்லை.
    புத்தகங்களை விட வாழ்க்கை நிறையவே கற்று கொடுக்கிறது.
    வரும் சந்ததியினர் அவர்கள் விரும்பும் கலையில் கவனம் செலுத்த வேண்டும் என்னும் தங்கள் கருத்துக்கு நானும் உடன் படுபவன்.
    மற்றபடி நான் ஆங்கிலத்தை ஒரு மொழியாகத்தான் பார்க்கிறேன். நமக்கு அறிவு மற்றும் அனுபவம் இருப்பதால் ஆங்கிலம் மட்டும் அல்ல எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்று கொள்ளலாம்.
    மேலும், நமக்கு ஒரு மொழி நன்றாக தெரிந்திருந்தால் அம்மொழி மீது ஒரு மதிப்பு வந்து விடும் எனவே,மற்ற மொழிகளை அதோடு கலப்பதை தவிர்த்து விடுவது தானாகவே வந்து விடும் என்பது எனது கருது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?