GANZALO
கன்சலோ ......16 அக்டோபர் 2014
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில்,விண்ணின் விடியலைத் தேடிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் மாய முக்கோணத்தின் மூலகோணமாம் பெர்முடாவே கன்சலோ-வின் வருகையை எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகளின் மேற்குப்பகுதியில் வெப்பத்துக்கு காற்றுடன் உண்டான கூடலில் உருவாக்கி,அமெரிக்க அரக்கனை அரவணைக்காமல்,காணாமலே காதல் கொண்ட கள்ளக்காதலன் பெர்முடாவை சந்திக்க 2014-ம் வருடம் அக்டோபர் 16-ம் நாள் மாலை 3 மணிக்கு வருவதாகக் கூறி இரவு 8 மணி வரை அலைய விட்டாள்; பின்பு அசைத்து எடுத்தாள்!ஆம்,அந்த கோரத் தாண்டவமாடிய கொடூரப் புயல் தான் கன்சலோ! தற்பொழுது உயிர்வாழும் எவரும் இதுபோன்றொருப் புயலைக்கண்டதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை!
ஆபத்தை எதிர்கொள்ள அதன் மாந்தர்கள் ஆயத்தமான கதைதான் புதியது என்றாலும் பல பழைய நினைவுகளையும் தந்தது. கண்ணாடி சாளரங்களெல்லாம் பழுதுகள் நீக்கப் பட்டு, உள்ளே கொக்கிகள் மாட்டப் பட்டு, வெளியே பலகைகள் கொண்டு மறைக்கப்பட்டு ஆணிகளால் கடாவப்பட்டன. பர்தா அணிந்து அழகுகள் மறைக்கப்படும் முகமதியப் பெண்தான் நினைவுக்கு வந்தாள்.
வேண்டிய,வேண்டாத,உதவாத அனைத்து கொள்கலன்களும் தண்ணீரால் நிரப்பப் பட்டன.கடும் கோடையில் எப்போதாவது வரும் பஞ்சாயத்து குழாய் நீருக்கு ஓட்டை உடைசல் பாத்திரங்களை வரிசையில் வைத்து தண்ணீர் நிரப்பியது எண்ணத்தில் நின்றது.
தண்ணீர் தொட்டியில் மொண்டெடுக்க சிறிய வாளிகள் கயிறு கட்டி ஆயத்தமாயின.கிணற்றின் கப்பியில் இறங்கியேறும் வாளிகள்தான் நனைவில் வந்தன.
மின்சேமிப்பு கலங்கள் அதிகம் வாங்கப்பட்டு, விளக்குகள் பழுது நீக்கப் பட்டன.மெழுவர்த்திகள்,தீப்பெட்டிகள் சேமிக்கப் பட்டன.சிம்மிணி விளக்கு துடைக்கப் பட்டு எண்ணெயும் ஊற்றுப்பட்டது.அரிக்கேன் விளக்கு தூய்மையாக்கப் பட்டது..என் பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது.
வாகனங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப் பட்டன.நம்மூர் அரசியல் வாதிகள் கைதாகும் போது கல்லடிபடும் நம்மூர் வாகனங்களின் பரிதாப நிலைதான் என் நினைவில்.
அசையும் அழகுச் செடிகள் அனைத்தும் கயிறுகளால் அனைத்துக் கட்டப் பட்டு அசையா சுவரில் நங்கூரம் பாய்ச்சப் பட்டன.நம்மூர் வாடைக் காற்று சமையம் வாழைமரங்களுக்கு மூட்டுக் கொடுக்கும் விவசாயிகளின் பரிதவிப்பு இங்கேயும்..
ஒழுகும் ஓட்டைக் கூரைகள்,கதவு இடுக்குகள் மறைக்கப் பட்டன.ஒழுகும் கூரையின் ஓட்டின் இடையே பானை ஓலைச் சொருகிய அந்த நாள் ஞாபகம்.
ஆயத்தம் மட்டுமல்ல..அவளின் கோரதாண்டவமும், கடந்துச் சென்ற பாதைச் சுவடுகளும் தான்....
கண்ணுறங்கா காத்திருந்த இரவின் சோர்வுடன் காலை விடிந்து பார்த்தல்..கூரைகள் எல்லாம் ஏதோ நவீன ஓவியத்தின் புரியாத புதிர் போல..இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல்...
சாலையின் இருமருங்கும் இருந்த மரம் செடி கொடிகள் எல்லாம் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மையப் பகுதிக்கு குடி பெயர்ந்து விட்டன.
"எது எப்படி இருந்தாலும்,புனரமைப்பு பணிகள் முடியுமுன் எப்படியும் கிறிஸ்து பிறப்பு வந்து விடும்..அதுவரை வேலை இல்லை என்றொரு சோகச் சொல் இனி இராது"-இது இந்த மண்ணின் மைந்தர் சொன்னது.
இவர்களிடம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!
Comments
Post a Comment