நான் தமிழன் டா!

                              நான் தமிழன் டா!





அன்று ஒருநாள்...இரவுப்பணி முடிந்தது, எப்போதுடா  வீட்டுக்கு போலாமென்றிருந்த நேரம்..பகல் பணிக்கு வர வேண்டியவர் நோய் விடுப்புக் கூறி வரமுடியாமற் போனதால் அதிக நேரம் வேலை(அதாங்க ஓவர் டைம்) செய்ய வாய்ப்பு கிடைத்தும் மறுத்தேன்.உடனே, என் சக பணியாளினி என் மேல் கொண்ட அக்கறையால், "அதிக பணம் கிடைக்குமல்லவா? வீட்டில் போய் அப்படி என்னதான் செய்யப்போகிறாய்" என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டாள்."பணம் மட்டும் முக்கியமல்ல"என்று சற்று உரக்கவே கூறி விட்டேன்.எந்த பிரச்சினைகளை முன்னெடுத்தாலும் சம்பளம் வாங்கி கொண்டுதானே வேலை செய்கிறீர்கள் என்று கூறி வாயடைக்கும் மேலாளர் காதிலும் விழுந்து விட்டது(அவருக்கு கேட்க வேண்டும் என்றுதான் சொன்னேன்).எப்போதும் இல்லாத வித்தியாசமாக பார்த்துச் சென்றார்.எதோ புரிந்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது."ரௌத்திரம் பழகு" என்ற பாரதி என் முன் தோன்றி மறைந்தார்!

எனது மேற்கத்திய நண்பன் ஒருவனுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தேன். அவன்: உனக்கு எங்களுடன் பழக நட்பு பாராட்ட எந்த தயக்கமும் இல்லையா?
நான்:    ஏன்?
அவன்: உனது கலாச்சாரம்,பழக்கவழக்கம்,உணவு,உடை,மொழி அனைத்தும் வேறு அல்லவா; ஆனாலும் உன்னில் எந்த வித்தியாசத்தையும் உணர வில்லையே?
இப்போது கணியன் பூங்குன்றனார் உதவினார் "யாதும் ஊரே,யாவரும் கேளீர்"என்று.

அன்று மிகவும் கடினமான பணிவேளை!உடன் ஊழியர்கள் முகங்களிலெல்லாம்  சோகம்  தொங்கிக்கொண்டிருந்தது.துக்கமும், தூக்கமும் குடிகொண்டிருந்தன.நான் மட்டும் கவலையை மறந்து பாடிக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்."நீ மட்டும் எப்படி?" எல்லோரும் என்னிடம்...."ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது" எல்லாம் நம் முன்னோர் காட்டிய வழிதான்!

எங்களில் சிலருக்கு, எங்களின் கவனக் குறைவால் செய்த தவறுக்கு விசாரணை முடிந்து, தண்டனை விளக்கத்தை கடிதத்தில் தந்திருந்தார்கள்.மற்றவர்கள் முகத்தில் கண்ணீர் தாரைகள்.எனது முகத்தில் மட்டும் புன்னகைக்  கோடுகள். உனக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வில்லையா என்று கேட்டவருக்கு நான் கூறியது,"இடுக்கண் வருங்கால் நகுக"அய்யன் திருவள்ளுவர் வந்து நின்றார்.

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?