போராட்டம்

கருப்பையில் உருவாக 

கருவறையிலும் கலவியறையிலும்

கணவ‍ன் மனைவியின் கடினமான போராட்டம்!


இணைகளின் சினைபிடிக்க 

'இந்திரியம்', 'அண்டம்' என்னும்

இணை ஆயுத அணுக்களின் இணக்கமான போராட்டம்!


பெண்மையாய் உருவானால், கருவொரு

பிண்டமென பிடிங்கியெரியாமலிருக்க

பெண்ணினத்தின் பொறுமையான போராட்டம்!


கருக்குளத்தின் நன்னீரின்

கரைகடந்து; இருள் துறந்து வெளியேற

முன்னூறு நாளளவும் மூச்சடைத்து போராட்டம்!


கருப்பை தவம் கலைத்து

சுவாசப்பை வெற்றிடம் நிரப்ப

நெஞ்சாங்கூட்டிடை உதரவிதானத்தின் உக்கிர போராட்டம்!


தொப்புள்கொடி பிரிந்து

இரைப்பை வெற்றிடம் நிரப்ப

தாய்பாலுக்காக அழுகையுடன், ஆரம்பமே போராட்டம்!


தலை நிமிர...உருண்டு புரள...

ஊர்ந்து நகர...எழுந்து நிற்க...

நடை பழக...ஓடி விளையாட..

முதல் வருடமழுமைக்கும்  முட்டி மோதிய போராட்டம்!


மதி கெட்ட மானிடனே,

மண்ணுலக வாழ்க்கையே ஒரு போராட்டமடா!

போராடினால்,

"ஆன்றி இந்தியன்"

"தேச விரோதி"

"தேச துரோகி"

"நாடே சுடுகாடாகிடும்"


மானுடமே மறவாதே,

சுடுகாட்டிலும் ஒரு போராட்டம் உண்டு

உன்னுடல் சாம்பலாக

உடலுக்கும் நெருப்புக்குமான கடைசி போராட்டம்!


Comments

Popular posts from this blog

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

இளமையின் ஏக்கம்

ஆரம்பாகமம்..